கோவிஷீல்ட் & கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் வழங்கும் எண்ணமில்லை  என மத்திய சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது நாடெங்கும் கோவிஷீல்ட் & கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் அதே இரண்டு டோஸ்களாக தடுப்பூசியை செலுத்தும் நடைமுறையே தொடரும் என நிதி ஆயோக்கை சேர்ந்த உறுப்பினர் மருத்துவர் விகே பால் தெரிவித்துள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசி 12 வார காலத்திற்கு பிறகும், கோவாக்சின் 4 முதல் 6 வார கால இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.






மேலும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட் & கோவாக்சின் ஆகிய இரண்டையும் கலந்து செலுத்துவது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது ஏதேனும் ஒரு தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக பிரித்து செலுத்தும் நடைமுறை உள்ளது, ஆனால் இரண்டு தடுப்பூசிகளும் கலந்து செலுத்தப்படுவதில்லை. "கோவிஷீல்ட் & கோவாக்சின் கலந்து செலுத்தப்பட்டால், அது எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது. அதனால் ஒரு தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்தும் கொள்கையே தொடரும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் விகே பால் தெரிவித்துள்ளதின் படி, குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகமான அளவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, அதனால் மிக விரைவில் குழந்தைகள் மத்தியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். 2 முதல் 3 சதவீதம் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், 2 முதல் 2.5 முறை அளவிற்கு கட்டமைப்புகள் தயார் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




>> 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!