தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். அதற்காகத்தான் முதல்-அமைச்சர் மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியும், அந்த மாவட்டங்களில் நேரில் சென்றும் ஆய்வு நடத்தினார். அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே கொரோனா வைரசின் பரவல் வேகம் குறைந்துள்ளது.


கிராமங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதை குறைப்பதற்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளரை அங்கு அனுப்பி 18 வயது முதல் 45 வயதுள்ளோருக்கான தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும், தொற்றின் அளவை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து வரவும் அறிவுறுத்தினார்.


அந்த வகையில், கடந்த மூன்று நாட்களில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தேனி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அனைத்து சேவைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தினோம். 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினோம்.




அதனால் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி பணியில் சிறப்பாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஒரேநாளில் தடுப்பூசி செலுத்திக கொண்டனர்.


நேற்று முன்தினம் 2 லட்சத்து 84 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நேற்று அது 3 லட்சத்தை கடந்துள்ளது. தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் இளம் வயதினர் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வர் அதற்கான தீர்வு காணும் பணியில், அதற்காக அதிகாரிகளை முடுக்கி விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். அதனால், தொற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது" எனக் கூறினார்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து 32 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.