மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்தது தொடர்பாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த கல்லூரி முதல்வர் ரத்தினவேலு மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 


மதுரை மருத்துவக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று இருந்தார். அப்போது மாணவர்கள்  ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியத்தை கூறி உறுதிமொழி எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.



                                                                 


இதனையடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்த மருத்துவர்கள் சங்கம், மருத்துவ கல்லூரி மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து இந்த உறுதிமொழியை தேர்ந்தெடுத்ததாகவும் போதிய கால அவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதிமொழி படிவத்தை பேராசிரியர்களிடம் காண்பிக்க வில்லை என்றும் இது குறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும்  தெரியாது விளக்கம் அளித்தது. 



                                                                         


மேலும் சமஸ்கிருதத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் வாசித்ததாகவும், அதை சமஸ் கிருதத்தில் படிக்கவில்லை என்றும்  சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதிமொழி படிவத்தை ஏற்ககூடாது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் நிகழ்ச்சி முடிந்தபின்புதான் இனி வரும் காலங்களில் இப்போகிரெடிக் உறுதிமொழியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது என்றும் கூறியதோடு மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வரை மீண்டும் கல்லூரி முதல்வராக பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பை மருத்துவக்கல்வித்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.