இந்தியா முழுவதும் துரித உணவுக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக தெருக்கள்தோறும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் முளைத்துக்கொண்டே வருகின்றன. நூடுல்ஸ், பரோட்டா தாண்டி இளைய தலைமுறையிடையே ஷவர்மா மோகம் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 


கேரளாவில் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




ஷவர்மா என்பது என்ன உணவு?


அடிப்படையில் ஷவர்மா லெபனீய உணவு வகை. லெபனான், அரபு நாடுகளில் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, ஒட்டகம் உள்ளிட்ட இறைச்சிகளை முதன்மை உணவாகக் கொண்டு, சாண்ட்விச் ஆகவோ, ரோல் ஆகவோ ஷவர்மா தயாரிக்கப்படுகிறது. இறைச்சி கிரில் முறையில் 60 செ.மீ. நீள கம்பியில் சுற்றப்பட்டு, வேக வைக்கப்படுகிறது. பின்பு மெல்லிய துண்டுகளாக வெட்டப்படுகிறது.


மசாலாவில் சீரகம், ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் மற்றும் மிளகு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாடுகளுக்கு ஏற்ற வகையில் மசாலா பொருட்கள் மாறுபடுகின்றன. வேக வைக்கப்பட்ட இறைச்சி, குபூஸ் எனப்படும் மைதா மாவால் செய்யப்பட்ட ரொட்டித் துண்டுகளால் மூடப்பட்டு, பரிமாறப்படுகிறது. சுவைக்காக சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. சுவை காரணமாக ஷவர்மா பல நாடுகளில் பிரபலமானது.


ஷவர்மாவுக்கெனப் புதிய, ஃப்ரெஷ்ஷான கோழி, ஆடு அல்லது பீஃப் இறைச்சியே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமாகும் இறைச்சியை மீண்டும் சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தும்போது, அந்த உணவு மெல்ல விஷமாக மாறுகிறது. 


இறைச்சி லேயர்களை வெட்டியெடுத்து, கம்பியில் கோத்து வைக்கும்போது அவற்றைச் சரியாக வேக வைக்காதபோது சிக்கல் உருவாகிறது. மீதமாகும் இறைச்சியைகுளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அடுத்த நாளில் சில கடைக்காரர்கள் பயன்படுத்தும்போது, இறைச்சியின் வெளிப்பகுதி மட்டும் வேகும். உள்ளே உள்ள பகுதி முழுமையாக வேகாதபோது பாக்டீரியா உருவாகிறது.


அதேபோல ஷவர்மாவில் சேர்க்கப்படும் ’மயோனிஸ்’, முட்டை வெள்ளைக்கரு மூலம் தயாரிக்கப்படுகிறது. இதை சுத்தமாகத் தயாரிக்காதபோதும் கிருமிகள் உருவாகின்றன.


இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணரும் குழந்தைகள் நல மருத்துவருமான குணசிங் ’ஏபிபி நாடு’விடம் கூறும்போது, ’’ஷவர்மா மாதிரியான துரித உணவுகளில் அதிக அளவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. அதேபோல நம்முடைய சுவை நரம்புகளைத் தூண்டி, இத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கும். இவற்றால் உடல் எடை கூடும், பருமன் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படும். ரத்தத்தில் கொழுப்பு படியும். மூளையில் இருந்து கிட்னி வரை பாதிப்பு ஏற்படும். 


இன்றைய தலைமுறையினர் ஆன்லைனில் ஆர்டர் செய்து, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவே தெரியாமல் போய்விடுகிறது. உடல்பயிற்சி அற்ற வாழ்க்கை முறையாலும் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகின்றன. 


ஃப்ரூட் ஜூஸ், குளிர்பானங்கள், ஊக்க பானங்கள் என தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அனைத்துமே உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துபவைதான். ஃப்ரான்ஸில் இந்த உணவுகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது. இந்தியாவிலும் வண்ணங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) பள்ளிகளில் 50 மீட்டர் தொலைவுக்குத் துரித உணவுகளை விற்கத் தடை விதித்துள்ளது. ஆனால் இவை எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. 




உணவு சரியாகப் பதப்படுத்தப்படாத சூழலில், கெட்டுப்போய் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடுகிறது. ஸ்டெஃபலோகாக்கஸ் (Staphylococcus), சால்மனல்லா (Salmonella) ஆகிய இரண்டு பாக்டீரியாக்களே இதற்கு முக்கியக் காரணம். கெட்டுப்போன உணவுப் பொருட்களில், குறிப்பாக இறைச்சிகளில் இந்த பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடும். நச்சுப் பொருட்கள் உருவாகத் தொடங்கும். அடுத்தபடியாக ஷிஜல்லா (Shigella) பாக்டீரியா முக்கியக் காரணமாக இருக்கலாம். 


இவற்றைச் சாப்பிடும்போது வாந்தி, பேதி, மயக்கம் ஏற்படும். கேரளச் சிறுமி விவகாரத்தில் கெட்டுப்போன பழைய சிக்கனை மீதம் வைத்திருப்பார்கள். அல்லது சரியான முறையில் பதப்படுத்தி வைக்காததால், கெட்டுப்போயிருக்கும். அது தெரியாமலேயே எடுத்துச் சூடாக்கி, பரிமாறி இருப்பார்கள். அந்த ஷவர்மாவில் ஸ்டெஃபலோகாக்கஸ் அல்லது சால்மனல்லா பாக்டீரியா வளர்ந்திருக்கலாம். அதை உட்கொண்ட சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால்கூட இறப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆரணியில் தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கலாம். 


 



மருத்துவர் குணசிங்


எப்படிக் கண்டுபிடிப்பது?


வாந்தி, பேதி ஆகியவற்றைப் பரிசோதனை (Bacteria Culture Test) செய்வதன் மூலம் உணவில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்கலாம். 


முடிந்த அளவு வெளிப்புற உணவைத் தவிர்த்து, வீட்டு உணவை உட்கொள்வதே இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் உடல் நலனைக் காக்கவும் ஒரே வழி. அதேபோல உணவுத் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், அடிக்கடி உணவகங்களில் பரிசோதனை நடத்த வேண்டியது அவசியம்’’. 


இவ்வாறு மருத்துவர் குணசிங் தெரிவித்தார். 


எல்லாவற்றிலும் வேகத்துக்குப் பழகிவிட்ட நாம், உணவிலும் துரித வகைகளை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம். இது உடல்நலத்தையும் வேகமாக பாதிக்கும் என்பதை மட்டும் மறக்கக்கூடாது என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.