போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்திட திட்டமிட்டுள்ளது.


இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்:


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலைப் பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம் ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும். மது போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினர் இடையே சிந்திக்கும் திறன்களை குறைத்து, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திட காரணமாக அமைந்திடும்.


எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் "போதையில்லா தமிழ்நாடு" என்கிற தலைப்பில் ரீல்'ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய போட்டிகள் நடத்திட முன்வந்துள்ளது.


இப்போட்டிகளில், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில் உருவான படைப்புகளை நவம்பர்-15 தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தமிழ்நாடு அரசின் திட்டம்:


இப்போட்டிகளில் கலந்துக்கொள்பவர்கள் அணுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்கள்" என குறிப்பிட்டுள்ளது.


மத்திய போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது என்றும்  மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் கூட பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை என தமிழக ஆளுநர் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.


"நாட்டின் பல பகுதிகள் போதை பழக்கத்தால் சிதைந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது.


மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை. மத்திய நிறுவனங்கள் டன் கணக்கில் போதை பொருட்களை பறிமுதல் செய்கிறது. பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில்தான் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" என பகீர் தகவலை ஆளுநர் பகிர்ந்திருந்தார்.


சமீிபத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முன்வைத்து திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.