இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.26 லட்சம், நேற்று 3.11 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.81 லட்சமாக குறைந்தது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கையில் எடுக்கப்பட்ட முயற்சி வார் ரூம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டளை மையம் கொரோனா ’வார் ரூம்’ ஆகச் செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த கட்டளை மையம் கொரோனா நெருக்கடியை நிர்வகிக்க உதவும் ஒரு குறுக்கு செயல்பாட்டு (cross functional) தலைமை மையமாக இருக்கும், கொரோனா காலத்தில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி போன்ற மிக அவசரமான பிரச்சனைகளின் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் நெருக்கடியைத் தவிர்க்க இந்த மையம் உதவும். கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கட்டளை மையம் தமிழ்நாடு மருத்துவமனைகளில் இருக்கும் காலிப் படுக்கைகள் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு மருத்துவப் படுக்கைகள் மேலாண்மைத் தளம் வழியாகக் கண்காணிக்கும். இதன்வழியாக நோயாளிகளின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யமுடியும். மேலும் இந்த வார் ரூம், படுக்கை வசதிகளை அதிகரிக்க தொழிற்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அரசு கொரோனா கேர் மையங்களுடன் இணைந்து செயல்படும்.
அதன்படி தற்போது கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளம் தமிழக அரசின் 'Covid War Room' சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளப்பக்கத்தில் சென்று, நோயாளியின் பெயர், விவரம், அறிகுறிகள், நோயில் தன்மை, பரிசோதனை முடிவுகள் போன்ற விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். எந்த மாவட்டம், எந்த வகையானபடுக்கை வேண்டும், அரசு மருத்துவமனையில் வேண்டுமா அல்லது தனியார் மருத்துவனையா போன்ற தகவல்களும் கேட்கப்படும். நமக்கு தேவையான விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்
மேலும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து Submit கொடுத்தால் படுக்கை வசதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.