2025-ஆம் ஆண்டிற்கான 'வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்ணா பதக்கம் எதற்காக வழங்கப்படுகிறது? 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.


பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) -க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


2025-ஆம் ஆண்டிற்கான 'வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.


வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அதற்கென உள்ள உள்ளடக்கியதாகவும். படிவத்தில் விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர் 2024 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர்.


கடந்தாண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, வெள்ளபாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வைகுண்டம் வட்டாட்சியர் சு.சிவகுமார் உள்ளிட்டோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!