தமிழ்நாடு விருது வழங்கும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


இதுகுறித்துத் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்து உள்ளதாவது:


 தமிழினத் தலைவர் என்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும்


ரூ.10 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம்


விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்பெறும் என மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


விருது எப்போது?


 2025ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகிய விருதுகளோடு புதிய விருதான முத்தமிழறிஞர் கலைஞர் விருதும் இணைந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


 விண்ணப்பிப்பது எப்படி?


* ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள், https://tamilvalarchithurai.tn.gov.in/awards/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


* https://tamilvalarchithurai.tn.gov.in/kalaignar-award-appl/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.


* அதில் கேட்கப்பட்டு இருக்கும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


* அத்துடன் விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்க பணிகள், கல்வித் தகுதிகள், வகித்த பதவிகள், ஆற்றியுள்ள தமிழ்ப் பணிகள், பெற்ற பட்டங்கள், வெளியிட்ட நூல்கள்/ கட்டுரைகள், தர விரும்பும் பிற தகவல்கள் ஆகியவற்றையும் முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.


* தொடர்ந்து புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றையும் உள்ளிட்டு, அக்டோபர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.          


கூடுதல் விவரங்களுக்கு: 044-28190412, 044-28190413