Thirumavalavan MP: தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தினை ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியதாவது,
சட்டமன்றத்தில் ஆளுநரின் செயலுக்கு உடனடி எதிர்வினையாற்றிய முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண் அல்ல அது, இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கு இடையில் உள்ள உறவு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த முரண்பாடு ஆகும்.
ஆளுநர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு இதை செய்து விட்டார் என கருத முடியாது, அரசியல் குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு தான் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். அரசு தயாரித்து கொடுத்த உரை ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் தான் அச்சுக்கு போகிறது. இதில், ஆளுநர் தான் உரையாற்றும் போது சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை இணைத்தும் பேசியுள்ளார். இது சங்பரிவார் செயல் திட்டங்களில் ஒன்று என உணர முடிகிறது. உரையில் இருப்பதை மீறி படிக்கக்கூடாது, எதையும் இணைத்து படிக்கக்கூடாது என அவருக்கு நன்றாகவே தெரியும். இதற்கு முன்னர் நாகலாந்தில் ஆளுநராக இருந்த இவர், நன்கு அனுபவாம் வாய்ந்தவர். ஆனால் அவர் அந்த மரபை மீறியுள்ளார். முன் அனுபவம் உள்ளவர் இவ்வாறு செய்வது, உள்நோக்கத்துடன் திட்டமிட்ட ஒன்று. அதனை அனுமதிக்க முடியாது. முதலமைச்சருக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம். வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது. அரசின் இலச்சினை, தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார் என்றால் ஆளுநராக இருக்க தகுதியற்றவராகிறார் என அவர் பேசியுள்ளார்.
நேற்று, ஆளுநர் தனது உரையில், திராவிட நாடு, திராவிட மாடல், பெரியார், கலைஞர், அண்ணா உள்ளிட்ட பகுதி அடங்கிய பக்கத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஆளுநருக்குப் பேசக் கொடுத்த உரையே அவைக் குறிப்பில் இடம்பெறத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைக் கேட்ட ஆளுநர் ரவி, முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது பாதியிலேயே சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் செயலைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்று ஆளுநர் சட்ட மன்றத்தில் இருந்து வெளியேறியதும், திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ். முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி, ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். மேலும், சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.