சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில்  சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கனல் கண்ணன், பல படங்களில் சண்டை காட்சிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். 1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் படத்தில் அறிமுகமான அவர் 2017 ஆம் ஆண்டு கடைசியாக குருதிப்பூக்கள் என்ற படத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக பணியாற்றியிருந்தார்.


இதற்கிடையில் சங்கரன்கோவில், சற்றுமுன் கிடைத்த தகவல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய அவர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்தார்.  தொடர்ந்து இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்ட கனல் கண்ணன் கடந்த ஜூலை 31 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். 


இதனையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கனல் கண்ணனுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும், மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதித்திருந்தார். 


இந்நிலையில் தந்தை பெரியார் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 5 மாதங்கள் ஆகியும் கனல் கண்ணன் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.