மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15- ஆம் தேதியும், பாலமேட்டில் வரும் 16 ஆம் தேதியும், வரும் 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த 3போட்டிகளிலும் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவுகள் madurai.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக  தொடங்கியது.  இன்று காலை 12.10 மணி தொடங்கிய பதிவானது வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை  பதிவு செய்யப்படவுள்ளது.



மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், மருத்துவச்சான்று, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட்டு, மாடுபிடி வீரரின் பெயர், பங்கேற்ககூடிய மாவட்டம்,  இடம், ஆதார் எண், எடை, உயரம், இரத்தவகை, தொலைபேசி எண், இமெயில் ஐடி மற்றும்  முகவரி ஆகியவற்றை பதிவிட்ட பின்னர் ஓடிபி பெறப்பட்டு பின்னர் ஒப்புகை சான்று  QR கோடுடன் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.



இதேபோன்று போட்டிகளில் பதிவு செய்யப்படும் காளைகளுக்கான போட்டிக்கான மாவட்டம், இடம், உரிமையாளரின் ஆதார் எண், உதவியாளர் ஆதார் எண், காளையின் வகை, காளையின் வயது, காளையின் பல் வரிசை, கொம்பின் நீளம், கொம்புகளுக்கு இடையேயான இடைவெளி, காளையின் நிறம்,காளையின் அடையாளம், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை பெயர் ஆகிய விவரங்களை பதிவிட்டு காளை உரிமையாளரின் ஆதார் சான்று, கொரோனா தடுப்பூசி சான்று, காளையுடன் உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் எடுத்த புகைப்படம், காளைக்கான மருத்துவசான்று ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் காளைகளுக்கான உறுதிமொழியை உரிமையாளர் ஏற்பதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ஒப்புதல் சான்று QR கோடுடன் வழங்கப்படுகின்றது



பதிவுசெய்யப்பட்ட காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளில்  ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி. இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி. இதேபோன்று மாடுபிடி வீரர்களுக்கும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி.



பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் பதிவால் உரிய பயிற்சி இல்லாத மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண