சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் தமிழ் ஆளுமைகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாடினார். அப்போது, தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய ஆளுநர், “தமிழ் மொழிக்கு இணையான மொழி சமஸ்கிருதத்தை தாண்டி வேறு மொழி ஏதுமில்லை. அறம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஒரு சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை. கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் அல்ல.
"தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை நான்"
உயிரினம் கஷ்டப்படுவதை பார்த்து கவலை கொள்வதும் ஆன்மீகம் தான். நான் ஆளுநரோ இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டேன். தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்.
தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு எனக்கு தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தெரியாது. இங்கு வந்த பின்னர் திருக்குறள் படிக்க தொடங்கினேன். திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்பை படிக்கும்போது, தமிழ் மொழியின் மீது ஆழமான அன்பு ஏற்பட்டது” என்றார்.
தமிழ்மொழி குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் ஆளுநர் ரவி சனாதனம் குறித்து சர்ச்சையாக பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய அவர், சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார்.
"சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு"
அதேபோல, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தமிழ்நாடு புனிதமான நிலம். வளமான நாடு. பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் சனாதன தர்மம்.
இந்த சனாதன தர்மம் துவங்க தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. சனாதனத்தில் தீண்டாமை வலியுறுத்தப்படுவதில்லை. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளாக இது உள்ளது.
1000 ஆண்டுகள் வெளிநாட்டினர் ஆட்சியில் பலர் அதை மறந்து விட்டனர். இது சனாதன நாடு. 1947இல் தான் நாடு உருவானது என்று நினைக்கின்றனர். அது, எனக்கு நகைப்பாக உள்ளது. சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மத்தை பிடித்து காக்கின்ற நிலம் இது. இந்த நிலத்தில் பிறந்ததால் அரவிந்தர் ரிஷி அரவிந்தரானார்" என்றார்.
கடந்த ஜனவரி மாதம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, "இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது" என்றார்.