சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.


தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திருவள்ளுவர், சாதி, மகாத்மா காந்தி, வள்ளலார் என பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 

"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி"

 

இந்த நிலையில், சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் பேசிய ஆளுநர், "இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி, பல டிடி ஊழியர்கள் ஹிந்தி மொழிக்கான போட்டியில் பங்கேற்று இன்று பரிசு பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாம் சுற்றுப்பயணம் கொண்டு இருக்கிறேன்.

 

பல ஊர்களில், பலர் ஹிந்தி கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ஹிந்தியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் தமிழர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என கூறிய போது பிரச்சாரம் செய்தார்கள். அப்போது பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர் தமிழ் மொழி வேண்டாம் என்றார்.

 

பரபரப்பை கிளப்பிய தமிழக ஆளுநரின் கருத்து:

அதற்கு எதிராக குரல் எழுப்பியவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய கட்டுரை அன்று ஹிந்து இதழில் வெளியானது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சமூக தத்துவங்களையும் வழங்கியதில் தமிழ் மொழி ஆங்கிலத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. மற்றவற்றை கற்றுத் தருவதில் ஆங்கிலத்திற்கு முன்னோடியாக தமிழ் இருக்கிறது.


கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை இந்திக்கு எதிராக பேசவைத்துள்ளனர். 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்றார். 


சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர், "மதச்சார்பின்மை என்பது வெளிநாட்டு கான்செப்ட்" என கூறியது சர்ச்சையை கிளப்பியது.


இதையும் படிக்க: "பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!