மத்திய போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது என்றும் மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் கூட பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை என தமிழக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "நமது நாடு நவராத்திரியை கொண்டாடி வருகிறது. தீயவையை அழித்ததன் வெற்றியாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா பூஜைகள் தினமும் இரவில் ராஜ் பவனில் நடத்தப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து துறைகளில் பஞ்சாப் முதன்மையாக விளங்கியது. தற்போது போதை பழக்கத்தால் மோசமான நிலையை சந்தித்து வருகிறது.
தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சு:
நாட்டின் பல பகுதிகள் போதை பழக்கத்தால் சிதைந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது.
மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை. மத்திய நிறுவனங்கள் டன் கணக்கில் போதை பொருட்களை பறிமுதல் செய்கிறது. பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில்தான் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர், "ஒரே அறையில் இருந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் செலவலிப்பது இல்லை. செல்போன்களை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள் பெற்றோர்களே குழந்தைகளின் முதல் பொறுப்பாளரகள். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வது அவசியம்" என்றார்.
கோயிலில் வழிபாடு: தென்காசி சென்ற ஆளுநர் ரவி, தன்னுடைய குடும்பத்தினருடன் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சங்கரநாராயணரை தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் தேசம் மேன்மேலும் முன்னேற்றம் அடைய, ஆளுநர் ரவி மனபூர்வமாக வேண்டிக் கொண்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.