கரூரில் இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு 2400 மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்


கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


 


 




அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை குழுவினர் அமைக்கப்பட்டு, அந்த குழு கரூர் மாநகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


 


 




இந்த சோதனையில் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்த எடில் ரெமிங்டன், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த மலர் (எ) மலர்க்கொடி, காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தினர். அதில் Tapantadol HCL 100 mg என்ற வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்தது அம்பலமானது.


 




 


மேலும், அவர்களிடமிருந்து 2400 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கும்பல் ஒரு மாத்திரையை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.


 


 





போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை, கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போலீசார் எடில் ரெமிங்டன் மற்றும் மலர்கொடி ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த நிலையில்,


 





போதை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் கிஷோர் குமாருக்கு ஏற்பட்ட சிறுநீரக கோளாறு காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் போதை மருந்து கும்பல் கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.