தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவை வீழ்த்தும் வகையில் திமுக கையில் எடுத்த ஆயுதம் தான் மகளிர் உரிமை தொகை, அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் இணைய பயனாளிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும், 300 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, அரசு ஊழியர்கள், அரசின் வேறு உதவித் தொகைகளைப் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 1கோடியே 13 லட்சத்து 75ஆயிரத்து 492 மகளிர்களுக்கு உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30,838 கோடி நிதி மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2025ஆண்டில் நவம்பர் மாதம் வரை 13 ஆயிரத்து 811 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 9121 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை - விரிவாக்கம்
இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் 29 லட்சம் பேர் விண்ணப்பம் வழங்கியிருந்தனர். இதில் சுமார் 17 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.இந்த நிலையில் இன்று காலை முதல் புதிதாக விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவுவைக்கப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் குஷியில் கொண்டாடி வருகிறார்கள்.
அதேநேரம் மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்து நிராகரித்தவர்கள் மீண்டும் இணையதளம் மூலம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் வருகிற ஜனவரி 15 முதல் மகளிர் தொகை கேட்டு விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்றோ அல்லது விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.