சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக மக்கள் சந்திப்புகளை நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அடுத்ததாக கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அடுத்தக்கட்ட பணியை தொடங்கவுள்ளது. அந்தவகையில் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. அதே நேரம் திமுகவை வீழ்த்த அதிமுகவும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய்நகர்த்தி வருகிறது. ஏற்கனவே பாஜகவை தங்கள் பக்கம் இழுத்த அதிமுக, அடுத்ததாக பாமக, தேமுதிக, தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டை குறிவைத்த பாஜக

இந்தநிலையில் பீகார் தேர்தலில் மிகப்பிரம்மாண்ட வெற்றியை பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழகத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, 'பீகாரில்  மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளோம். அடுத்து தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார். எனவே மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் இதற்கு தயாராக இருங்க என சவால் விடுத்திருந்தார். மக்கள் சக்தியுடன் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என அமித்ஷா கூறியிருந்தார்.  

புதிய வியூகங்களோடு அமித்ஷா

இந்த பரபரப்பான நிலையில் தமிழகத்தில் கால்வைக்கவுள்ளார் அமித்ஷா, வருகிற 15ஆம் தேதி சென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். தமிழக வருகையின் போது பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பு, திமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் என பல திட்டங்களை பாஜக நிர்வாகிகளோடு அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

எந்த ஷா வந்தாலென்ன.? மு.க.ஸ்டாலின் பதிலடி

அதே நேரம் திமுக தரப்பிலும் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! எனவும் குறிப்பிட்டிருந்தார்.