பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றான வாகனங்களை இயக்குவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசும் இதில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மதுரை, கோவையிலும் மின்சார பேருந்துகள்:
இதன் எதிரொலியாக, சென்னையில் தற்போது 255 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளின் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு பயணிகள் மத்தியில் கிடைத்துள்ளது. மேலும், இந்த வாகனகங்களால் ஒலி மற்றும் காற்று மாசு பன்மடங்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார பேருந்துகளின் செயல்பாட்டால் 40 சதவீதம் செலவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மின்சார பேருந்துகளை போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த மதுரை மற்றும் கோவையில் இயக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நிர்வாக செலவு பன்மடங்கு குறைவதுடன் கோவை மற்றும் மதுரையில் காற்று மாசு குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
எந்தெந்த வழித்தடங்கள்?
இந்த மின்சார பேருந்துகள் தனியார் பங்களிப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், விரைவில் மதுரை மற்றும் கோவையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு விரைவில் டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மதுரை மற்றும் காேவையில் சார்ஜிங் மையம் எந்தெந்த பணிமனைகளில் அமைப்பது? எந்தெந்த வழித்தடங்களில் முதற்கட்டமாக மின்சார பேருந்துகளை இயக்குவது? என்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மதுரை, கோவையில் இந்தாண்டு இறுதிக்குள் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைலேஜ் எவ்வளவு?
மின்சார பேருந்துகள் ஏசி வசதியுடனும், ஏசி இல்லாத வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. சென்னையில் தற்போது 255 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை முழுவதும் விரைவில் 1200 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையின் முக்கியமான வழித்தடங்களில் இந்த மின்சார பேருந்துகள் தடையின்றி இயங்கி வரும் நிலையில், பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்த பேருந்துகளும் பெரியளவில் உள்ளது. சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளுக்காக வி்யாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பல்லவன் இல்லம்,பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு சார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின்சார பேருந்துகளை இயக்குவது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாகவே நாட்டில் மின்சார வாகனங்களுக்கு தனி சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.