தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலாப் பொருட்களை கொண்டு மயோனிஸ் தயாரிக்கப்படுகிறது. பச்சை முட்டை பயன்படுத்துவதால் கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் மயோனிஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Salmonella typhimurium, Salmonella enteritidis, Escherichia coli, மற்றும் Listeria monocytogenes போன்ற கிருமிகளால் உடல்நலத்திற்கு பல்வேறு வகைகளில் தீங்கு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை போன்றே மயோனிசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயோனிஸ் அதிகமாக கிரில் சிக்கன் போன்ற உணவுப்பொருட்கள் தொட்டு சாப்பிடவே கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த மயோனிஸ் பொருளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் தொற்று நோய் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் தொற்றி விட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவே சுகாதாரத்துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல உணவு வணிக நிறுவனங்கள் மயோனிஸ் தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதாகவும் முறையற்ற தயாரிப்பு, முறையற்ற சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை அபாயத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தரமான உணவை உணவகங்களில் வழங்க வேண்டும். இதுதான் அரசின் நோக்கம். பாதுகாப்பான உணவு சூழலை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். உடலந்லத்தை பாதுகாக்க தரமான உணவை உண்பது முக்கியம். மயோனிசுக்கு தடை விதித்துள்ளதால் சில காலங்களுக்கு இதன் பயன்பாடு குறையும். முறையான பாதுகாப்பு குறித்து தகவல் வரும்வரை இந்த தடை தொடரும்.” எனத் தெரிவித்தனர்.