விவசாயமும் நாட்டின் முன்னேற்றமும்

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயம் தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாய உற்பத்தியை அதிகரிக்க மானியத்தில் உதவிகளும், குறைந்த வட்டியில் கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது. இதே போல கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கேழ்வரகு கொள்முதல் விலையை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

கேழ்வரகு கொள்முதல் அதிகரிப்பு

அந்த வகையில்  தமிழ்நாட்டில்  கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்  நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022-2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தருமபுரி மற்றும் 514 மெட்ரிக் டன் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 2023-2024ஆம் ஆண்டில் கொள்முதல் பருவத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து, 4 மாவட்டங்களில் மொத்தம் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. 

கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு

அதனைத் தொடர்ந்து, கடந்த 2024-2025 கொள்முதல் பருவத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 4050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. எனவே கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டு நவம்பர் மாதத்திலிருந்து, விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48860 என்ற ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நடப்பு 2025-2026-கொள்முதல் பருவத்தில் 01.11.2025 முதல் 31.01.2026 வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகளிடமிருந்து 6000 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  கடந்த ஆண்டில் கொள்முதல் விலையான மெட்ரிக் டன் ஒன்றிற்கு ет. 42900 என்பதை விட இந்த ஆண்டு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ. 5960 கூடுதலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நல் வாய்ப்பினைப் விவசாயிகள் பயன்படுத்தி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட கேழ்வரகு விவசாயப் பெருங்குடி மக்கள். தாங்கள் விளைவித்த கேழ்வரகினைத் தங்கள் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.