அரசாணை (நிலை) எண் 115 குறித்த மனித வள சீர்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனித வள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.


அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்''.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


முன்னதாக அரசுப்‌ பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும்‌ பயிற்‌சி தொடர்பாக மனித வள மேலாண்மைத்‌ துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 குறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், ''மனிதவள சீர்திருத்தக்‌ குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்தக்‌ குழுவின்‌ ஆய்வு வரம்புகள் கவலையளிப்பதாக உள்ளது.


* பன்முக வேலைத்‌ திறனோடு பணியாளர்களின்‌ ஆட்சேர்ப்பு மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்‌.


* அரசின்‌ பல்வேறு நிலைப்‌ பணியிடங்கள்‌ / பதவிகள்‌ / பணிகள்‌ ஆகியவற்றை திறன்‌ அடிப்படையில்‌ ஒப்பந்த முறையில்‌ நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது


* பரந்துபட்ட முறையில்‌ பிரிவு டி மற்றும்‌ சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம்‌ நிரப்புவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது ,


* தொழிலாளர்‌ சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது வெளிமுகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசுப்‌ பணியிடங்களை அவற்றைக்‌ கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது


* அரசின்‌ உயர்நிலைப்‌ பணியிடங்களை தனியார்‌ நிறுவனங்களுடன்‌ ஒப்பிட்டு அப்பணியிடங்களின்‌ வேலைத்திறன்‌ மற்றும்‌ மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல்‌


* பணியாளர்கள்‌ ஒப்பந்த முறையில்‌ நியமித்து, குறிப்பிட்ட காலத்திற்குப்‌ பிறகு அவர்களின்‌ பணிச்‌ செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அதன்பிறகு அவர்களைக் காலமுறை ஊதியத்தில்‌ கொண்டுவருவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது.


ஆகிய ஆய்வு வரம்புகள்  பணியாளர்‌ விரோத நடவடிக்கை என்பதோடு, சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை'' என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் குறிப்பிட்டிருந்தது. 


''தமிழக முதலமைச்சர்‌ இந்த விஷயத்தில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, தமிழகத்தில்‌ நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ மூலம்‌, சமூக நீதியை நிலைநாட்டும்‌ வகையில்‌, இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும்‌ வகையிலும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்திட வேண்டும்''‌ என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் ‌ கேட்டுக்‌ கொண்டது. 


இந்த நிலையில், அரசாணை (நிலை) எண் 115 குறித்த மனித வள சீர்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


முன்னதாக அரசாணை எண் 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.