சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவர் திமுகவின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி விமலா கவுன்சிலராக உள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி நாகலட்சுமி. இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக சிறு பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கிருஷ்ணமூர்த்தி,  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ளார். நாகலட்சுமி கையெழுத்து போடுவதற்கு பதிலாக தனது மனைவி விமலாவையே, கையெழுத்து போட வைத்ததாக கூறப்படுகிறது.



 

 

இதுகுறித்து தகவல் அறிந்த நாகலக்ஷ்மி தாம்பரம் மாநகர் காவல் ஆணையரக அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து கைரேகை வைத்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் சென்னை மாநகராட்சியின் மயிலாப்பூர் பகுதி 124 வது வார்டு கவுன்சிலர் விமலாவையும் தேடி வருகின்றனர்.

 

விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்

 

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,  கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் பூர்வீக சொத்துக்களை கடந்த 2005 ஆம் ஆண்டு, கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி ஆன நாகலட்சுமிக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மூலம் சொத்தை அபகரித்தது தெரியவந்தது. அதில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி விமலாவை சகோதரி நாகலட்சுமி என்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலியாக கையெழுத்து போட்டு கைரேகையும் வைக்க வைத்துள்ளார். 

 

நாகலட்சுமி தனது கையெழுத்தை ஆங்கிலத்தில் தான் போடுவது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். ஆனால் பத்திரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு , இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கவுன்சிலர் விமலாவை தேடி வருகின்றனர்.