தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிற்து. இந்நிலையில், கொரோனா தொற்றை பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நாளை காலை 10 மணிக்கு  முதலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.


தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்பு தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பு அதிகமிருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்வதால்,பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டிலும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று  சிலர் கூறி வருகின்றனர். மருத்துவ நிபுணர் குழுவும் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே முதல்வரிடம் பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு ஊரடங்கு நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளது.




தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று மாநிலத்திலே முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் நேற்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர்.


 


சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.