வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் P சரவணன் (37). நாராயணி என்ற பெயரில் மூன்று உணவகங்களை நடத்திவரும் இவர்  நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்னதாக சரவணன் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் , குடியாத்தம் நகராட்சியை சேர்ந்த ஒரு பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த புகாரின் அடிப்படையில்  செவ்வாய் இரவு அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது



சரவணன்


இது குறித்து குடியாத்தம் நகராட்சியை சேர்ந்த ஒரு அதிகாரி நம்மிடம் பேசிய பொழுது .சரவணன் மோடிக்குப்பம் பகுதியில் சைவம், அசைவம் என்று மூன்று ஓட்டல்கள் நடத்தி வருகின்றார் கொரோனா தொற்று தீவிரம் அடைந்திருக்கும் இந்த வேளையில் வேலூர் மாவட்டம் முழுவதும் சில தளர்வுகளோடு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து  அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகங்கள் காலை 6  மணிமுதல் காலை 10  மணிவரை மட்டுமே சமூக இடைவெளிகளை பின்பற்றி  செயல்பட வேண்டும், ஓட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் மட்டுமே தரவேண்டும், மருந்தகங்கள் மட்டும் 24 மணிநேரமும் செயல்படலாம் என முழு அனுமதி தரப்பட்டுள்ளது. 



கடந்த 14-ஆம் தேதி குடியாத்தம் நகராட்சியை சேர்ந்த சுகாதார துறை மேற்பார்வையாளர் சாமுண்டீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் மோடிக்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் பொழுது, சரவணன் தனது ஓட்டல்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் , முழு ஊரடங்கு விதிகளை மீறி தனது வாடிக்கையாளர்களை ஓட்டலில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளித்துள்ளார். குடியாத்தம் நகராட்சி அலுவலர்கள் கொடுத்த பரிந்துரையின் பெயரில், குடியாத்தம் நகராட்சி ஆணையர் சீஸில் தாமஸ், சரவணன் ஓட்டலுக்கு 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தார் .


அபராதத்தை செலுத்திய சரவணன், பின்பு மாலை பெண் அதிகாரி சாமுண்டீஸ்வரியை போனில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தார் என்று புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அவர்மீது அரசு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது , அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நம்மை தொடர்புகொண்ட ஓட்டல் உரிமையாளர் சரவணன் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார். நகராட்சி அதிகாரிகள் கேட்ட லஞ்ச பணத்தை உரிய நேரத்தில் கொடுக்காததால் என் ஓட்டலுக்கு வேண்டுமென்ற அபராதம் விதித்து , என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் .



நம்மிடம் மேலும் பேசிய சரவணன் , நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியான சாமுண்டீஸ்வரி ஓட்டல்களுக்கு மாத மாதம் செலுத்த வேண்டிய வரியை வசூலிப்பதோடு இல்லாமல் , மூன்று ஓட்டல்களுக்கு சேர்த்து மாதம் 10,000  ரூபாய் வரையிலும் லஞ்சம் பெறுவதாக குற்றம்சாட்டினார். கடந்த 8 மாத காலமாக இந்த லஞ்ச பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்த சரவணன் , இதற்கு தேவையான வங்கி பரிவர்த்தனை ஆதாரங்களும், சாமுண்டீஸ்வரி லஞ்சம் கேட்டு போன் செய்த ஆடியோ உரையாடல்களுக்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளது என்று தெரிவித்தார். “எனக்கு மே மாதம் 10-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்ட சாமுண்டீஸ்வரி , இந்த மாதத்திற்கான லஞ்ச பணம் ஏன் இன்னும் கொடுத்து அனுப்பவில்லை என்று கேட்டார் . அதற்கு நான் முழு ஊரடங்கு என்பதால் வியாபாரம் மெத்தனமாக உள்ளது. இந்த வாரத்திற்குள் கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்தேன். இருந்தும் பொறுமையாக இருக்காமல் என் கடையை வேண்டும் என்றே ஆய்வு செய்து பொய் புகார்களை பதிந்துள்ளார்" என்று தெரிவித்தார் .


குடியாத்தம் நகராட்சி ஆணையர் சீஸில் தாமஸை தொடர்புகொண்டபொழுது, சாமுண்டிஸ்வரி தன்னை சரவணன் போனில் மிரட்டியதாக தெரிவித்ததை அடுத்து அவர்மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மே 14-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது . புகாரின் அடிப்படையில் 18-ஆம் தேதி அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 B , 353 மற்றும் 506 (1 ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . சரவணன் கூறும் லஞ்ச குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் பெண் அதிகாரி சாமுண்டீஸ்வரி மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .