தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. அதற்கு ஏற்றார்போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீதிமன்றம் அருகே படுகொலை:


அதுமட்டும் இன்றி, கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த குற்றச் சம்பவங்களை மேற்கோள் காட்டிய தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.


சட்டம், ஒழுங்கு இல்லையா?


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை நிகழ்ந்துள்ளது. 


அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை, போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன்,நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு  இதுவே சாட்சி. இந்த விடியா அரசின் முதலமைச்சர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, சென்னை பெரம்பூரில் உள்ள நகைகடையில் மர்மநபர்கள் தங்கம், வைரம் என மொத்தம் 9 கிலோ நகைககைளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


போலீசிடம் இருந்து தப்பிக்க இந்த கும்பல் சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளது. இதுதொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.