பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஏபிபி நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 


தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும் பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது என்றும், இதனை பிரபாகரனின் அனுமதியுடன் வெளிப்படுத்துகிறேன். இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் இந்த தகவலை கூறுகிறேன் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். இது பல விவாதங்களை கிளப்பியது. 


இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்த இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார். கண்டிப்பாக அவர் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி பழ.நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”டிஎன்ஏ அறிக்கை தொடங்கி எல்லா ஆதாரமும் எங்களிடம் உள்ளது. நிலைமை இப்படியிருக்கையில் குறிப்பிட்ட அந்த நபர் (பழ.நெடுமாறன்) எதன் அடிப்படையில் அப்படி சொன்னார் என தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் போரின் போது பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நிரூபித்து விட்டோம்”.


“அதேசமயம் இதுவரை எங்களுக்கு செய்தியாளர் சந்திப்பு குறித்த தகவல் வந்துள்ளது. விரைவில் இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிலளிப்பார்” எனவும்  இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளார். 


பழ.நெடுமாறன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை எம்.பி. சிறீதரன், “தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு திரும்பி எப்போது வருவார் என நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம். அவரோட வருகை உண்மையானால் நாங்கள் தான் உலகத்தின் மிக சிறந்த இனமாக அடையாளப்படுத்தக்கூடியவர்களாக இருப்போம்” என கூறியுள்ளார்.


மரணத்தில் நிலவும் மாறுபட்ட தகவல்


இலங்கை நாட்டில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான தமிழீழத் தனி நாடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி முன்னின்று நடத்தினார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் நடந்த  இறுதிக்கட்ட போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. 


முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள், தளபதிகள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் மரணம் குறித்த மாறுபட்ட தகவல் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.