கர்நாடகாவுக்கு எதிராக தமிழக விவசாயிகள் தங்கள் வாயில் செத்த எலிகளை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.


தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பெங்களூருவில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


அதன் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இதனால் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 






இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதனால் அங்கு எந்த அசம்பாவிதங்களுக்கும் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதைத்தொடர்ந்து இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் செத்த எலிகளை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடக்கோரியும் திருச்சிராப்பள்ளியில் தமிழக விவசாயிகள் வாயில் செத்த எலியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், “ அவர்கள் மாநிலத்தில் பந்த் நடைபெறுவது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் மூன்று பிரிவுகள் சொல்கிறார்கள். சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை. நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை சட்டமன்றமும் நிர்வாக துறையும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அனைவரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்ககூடிய தனித்தன்மை அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவுத்தன்மை பெற்றவர்கள் உணர வேண்டும்” என தெரிவித்தார். 


மேலும், “  உச்ச நீதிமன்றத்தின் படி தமிழ்நாட்டிற்கு 13/9/2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நாளையோடு 15 நாள் கெடு முடிகிறது. இடையிலான கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2000,3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இன்னும் 11000 கன அடி தண்ணீர் நமக்கு வர வேண்டி உள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும்” என குறிப்பிட்டுள்ளார்.