செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பழங்குடியின மாணவர்கள்
கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர், பகுதியில் பல ஆண்டு காலமாக வேட்டைக்கார நாயக்கர் என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு பழங்குடியினர் பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர், பகுதியில் பல ஆண்டு காலமாக வேட்டைக்கார நாயக்கர் என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு பழங்குடியினர் பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதன்காரணமாக 12 ஆம் வகுப்பு படித்து முடித்தும், ஒரு வருட காலமாக 4 மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் . அதேபோல் இந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 8 பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி கொண்டு இருக்கிறார்கள்.
பல ஆண்டுகாலமாக இவர்கள் தொடர்ந்து சாதி சான்றிதழ்களை கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து திரிந்தாலும் இதுவரை அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. பழங்குடியினர் பிரிவு ஜாதி சான்றிதழ் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரி கனவுகளுடன் காத்திருக்கும் மாணவி கூறுகையில், சோத்துபாக்கம் கிராமத்தில் வசிக்கும் எனக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்னால் கல்லூரி படிக்க முடியவில்லை. 600 க்கு 480 மதிப்பெண் பெற்றுள்ளேன் என் அக்காவும் 430 மதிப்பெண் பெற்றார், ஆனால் எங்களால் கல்லூரி படிப்பை படிக்க முடியவில்லை. என் அக்காவும் படிப்பதற்காக மிகவும் முயற்சி செய்தார்.
ஆனால் முடியவில்லை, எஸ்டி என்று ஜாதி சான்றிதழ் கிடைக்காததால், எங்களுடைய சான்றிதழை தூக்கி எரிந்து விடுகிறார்கள். ஆனால் அரசு அறிவித்திருக்கும் அறிவிப்பின் படி காட்டு நாயக்கர் என்கின்ற சாதிப் பிரிவே 12 வது இடத்தில் இருக்கிறது. நான் படிக்க வேண்டும் என்னுடன் சேர்ந்து அனைவரும் படிக்க வேண்டும், என்னிடம் அனைத்து விதமான சான்றிதழ்களும் இருக்கிறது . ஆனால் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். ஆன்லைனில் தற்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் சாதி சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் உங்களால் அதற்கு பதிவு செய்ய முடியாது என்று கூறிவிடுகிறார்கள்.
பழங்குடியின மக்களுக்கு டீச்சர் டிரைனிங் இலவசமாக தான் சொல்லி கொடுக்கிறார்கள், என்று எங்களுடைய ஆசிரியர் கூறினார். ஆனால் அதற்கும் ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கூறியதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
படித்து நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது. அதேபோல் அதே பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற மாணவி கூறுகையில் , பன்னிரண்டாவது வரை மட்டுமே எங்களால் படிக்க முடிந்துள்ளது. அதற்கு மேல் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், எங்களால் படிப்பை தொடர முடியவில்லை.
நாங்கள் கடைசி வரை இப்படி இருந்தால் எப்படி நாங்களும் படித்து மேலேறி வரவேண்டும் அல்லவா என கேள்வி எழுப்பினார். மேலும், எங்கள் ஊரில் யாருமே படிக்கவில்லை, நாங்கள் படித்து முன்னேற வேண்டுமென்றால் அதற்கு தற்போது ஜாதி சான்றிதழ் தடையாக உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர் என்பதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகுதான் சாதி சான்றிதழ் வழங்க முடியும் எனவே உடனடியாக மாணவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவு விடுவதாக தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
கண்ணீருடன் அடுத்த தலைமுறை கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.