தமிழகத்தின் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் மாவட்டம் வாரியாக வேறுபடுவதால் மாநிலம் முழுவதும் ஒரேமாதிரியான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவையற்றது என தொற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் தினசரி கொரோனா கடந்த 14 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 28 நாட்களில் இல்லாத அளவில், தமிழ்நாட்டின் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (24,406), மிகக்குறைவாக இருந்தது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,80,426 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 12.9 சதவீதமாகும்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நச்சுஉயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்," நாளொன்றில் பதிவாகும் (Active Cases) கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடந்த மே மாதம் 28ம் தேதியில் இருந்து குறையத் தொடங்கியது. அன்றாட கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் (-) 23 நெகட்டிவாக உள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் மக்கள் தொகையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 320 ஆக குறைந்துள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தொடர்வது தேவையற்றது" எனத் தெரிவித்தார்.
ஊரடங்கை நீக்கலாமா? கொரோனா எண்ணிக்கை சொல்வது என்ன?
மேலும், "கொரோனா அன்றாட பாதிப்பு விகிதம் குறையத் தொடங்கிய 14 நாட்களுக்குப் பின் கொரோனா இறப்பு எண்ணிக்கை உச்சகட்ட நிலையை எட்டும். அநேகமாக, தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் கொரோனா இறப்பு விகிதம் குறையத் தொடங்கும். எனவே,புறநகர் மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சரியான நோய்த் தொற்று மேலாண்மை நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்" என்றும் தெரிவித்தார்.
"Ro எண்ணிக்கை மூலம், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் சராசரியாக எத்தனை பேருக்கு பரப்புகிறார் என்ற விகிதத்தை கண்டறிய முடியும்"
மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தேவையில்லை என்ற கருத்தை ஐசிஎம்ஆர் தேசிய தொற்றுநோயியல் நிறுவன தலைவரும், தமிழ்நாடு கொரோனா தடுப்புக் குழு உறுப்பினருமான டாக்டர் பிரதீப் கவுரும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் மாவட்டம் வாரியாக வேறுபடுகிறது. மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றுக்கு தேவைப்படும் மருத்துவ வளங்களும் வேறுபடுகிறது. எனவே, அன்றாட கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, 5 சதவிகிதத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு விகிதம் (Positiviity rate), தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பயனாளிகளில் 70 சதிவிகித பேருக்கு தடுப்பூசி நிர்வகித்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
கோவையில் கொரோனா அதிகரிக்க என்ன காரணம்? - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
ஆனால், தமிழ்நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு விகிதம் (Total Positivity rate) மத்திய அரசு பரிந்துரைத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், அதிக பாதிப்பு கொண்ட முன்னுரிமை பயனாளிகளுக்கு குறைந்த அளிவில் மட்டுமே தடிப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது நடைமுறையில் உள்ள தளர்வற்ற பொது முடக்கநிலை சில தளர்வுகளுடன் ஜூன் 7ம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.