கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் கொடூரமாக உள்ளது. மருத்துவமனைகளில் வாசலில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் காத்துக்கிடக்கின்றன. வட மாநிலங்களில் எரியூட்டுவதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி கொத்துக் கொத்தாக மடிகின்றனர்.
வடமாநிலங்களில் தொடங்கிய ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது தமிழகத்திலும் தலைவிரித்தாடுகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரே இரவில் 11 பேர் பலி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபடுகின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் கடினமான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைவதாக கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா இரண்டாம் அலையின் இக்கட்டான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மட்டுமே உங்கள் கவலையாக இருக்க வேண்டும். இன்றும் மாஸ்க் போடாமல் இருப்பது, சமூக இடைவெளி இல்லாதது போன்ற கவனக்குறைவு எனக்கு ஏமாற்றத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நாளை காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் கொரோனாவின் தாக்கம் இருக்குமென்பதால் அரசின் அடுத்தக்கப்பட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவரின் இந்த எச்சரிக்கை பதிவை வைத்து பார்க்கும் போது, அடுத்த இரண்டு மாதத்திற்கு மோசமான சூழல் நிலவலாம் என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.