தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10:30-மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 8- நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால் ஆக்சன் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அங்கும் குறைந்த அளவிலேயே இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
இந்த காட்சிகளை பார்க்கும்போது கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக பொதுமக்கள் வீதி வீதியாக அலைந்து தெரிந்த காட்சிகள் தான் நம் கண்முன்னே வந்து சென்றன.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தங்கள் உறவினர்கள் உயிர் இழந்ததை தாங்க முடியாமல் அவர்களது உறவினர்கள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்கின்றன.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையில் இருந்த ஒருவரின் உறவினர் கூறுகையில், " இது என்னுடைய அப்பா சார்... எங்களுக்கெல்லாம் அவர் கிங் மாதிரி, பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்காங்க; டாக்டர்களால உயிரை காப்பாற்ற முடியவில்லை,’’ தேம்பி தேம்பி அழுதார்.
சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகே பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து காவல்துறையினரின் முழு ஒத்துழைப்புடன் ஆக்சிஜன் கொண்டுவந்து நிரப்பப்பட்டது. இதன் பிறகே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிலைமை ஓரளவு சீரானது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‛‛தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாகவும், இதை எதிர்பாராத இறப்பாக கருதுவதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும்,’’ தெரிவித்தார். அடுத்தடுத்து ஆக்ஜிசன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சிகிச்சைக்கு வந்த 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாகவே உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் இந்த எண்ணிக்கை அதிகாரிக்கலாம் என்பதால் அதற்கு முன் அரசு நிர்வாகம் தலையிட்டு துடித்துக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற வேண்டும் .