நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு தினசரி 3 லட்சம் என்ற அளவில் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 658 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 344 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பாதிப்பில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 640 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 27 ஆயிரத்து 18 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 789 ஆகும். மொத்தம் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 9 லட்சத்து 37 ஆயிரத்து 535 நபர்கள். பெண்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 462 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 449 நபர்கள் ஆவர். பெண்கள் 14 ஆயிரத்து 209 நபர்கள் ஆவர்.
இன்று மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 303 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் தனியார் மருத்துவமனையிலும், 178 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 359 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 703 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 75 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவார்கள் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 3.62 லட்சம், நேற்று 3.43 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.26 லட்சமாக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 317-ல் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ,00, 79,599 இல் இருந்து 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.