இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது.. நாடு முழுவதும் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவலின் தாக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது.


முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் தொற்றின் தாக்கமும், உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலானா மாநிலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.




இதை சரி செய்வதற்கு புதியதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும், கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கிராமத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரி செய்யப்பட்டு தொடங்கப்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”


இவ்வாறு அவர் கூறினார்.




ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மூன்று நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படும் நிலையில் அமைச்சர்கள் இது போன்ற தகவலை தெரிவித்து வருகின்றனர்.