தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தரமற்ற விதைநெல் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை அருகே அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தரமற்ற விதைநெல் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு. ஏழரை ஏக்கர் நிலத்தில் ஏடிடி45 விதை நெல்லை நேரடிநெல் விதைப்பு முறையில் விதைத்து 10 நாட்களாகியும் முளைக்காததால் இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கடக்கம் கிராமத்தில் சேர்ந்தவர் விவசாயி காண்டீபன். இவர் தனக்கு சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளார்.
குறுவை சாகுபடிக்காக கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 250 கிலோ ஏடிடி 45 ரக விதைநெல்லை வாங்கி நேரடி நெல்விதைப்பு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ வீதம் நடவு செய்துள்ளார்.
வழக்கமாக விதைவிட்ட நெல் மணிகள் நான்கு நாட்களில் முளைவிட துவங்கும். ஆனால் விதைநெல் 10 நாட்களாகியும் முளைக்காததால் விவசாயி காண்டீபன் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இருந்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என்று வேதனையுடன் கூறும் விவசாயி காண்டீபன், கூலி ஆட்களை வைத்து நிலத்தை சமன்படுத்தி, உழுது விதைவிட்டது வரை ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், உடனடியாக தன் நிலத்தை ஆய்வு செய்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயம் குதிரை கொம்பான இந்த காலகட்டத்தில் விவசாயிகளை ஊக்கு விக்க வேண்டியவர்களே தரமற்ற விதைகளை வினியோகம் செய்த கொடுமை நடந்துள்ளது.