தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வகையில் உள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 892 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.




சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4 லட்சத்து 19 ஆயிரத்து 261 நபர்களாக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனா தொற்று காரணமாக 6 ஆயிரத்து 538 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர இதர 36 மாவட்டங்களில் 25 ஆயிரத்து 354 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரப்படி, சென்னையில் மட்டும் 44 ஆயிரத்து 313 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் 9 லட்சத்து 18 ஆயிரத்து 86 நபர்களும், பெண்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 253 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 18 ஆயிரத்து 359 நபர்களும், பெண்கள் 13 ஆயிரத்து 533 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 20 ஆயிரத்து 37 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 13 லட்சத்து 18 ஆயிரத்து 982 நபர்கள் ஆவார்கள்.


இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 288 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 158 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 621 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 68 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போது வரும் 24-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஊரடங்கு நாளை முதல் மிக கடுமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.