தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 24 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 258 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 62 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் கடந்த வாரங்களில் 7 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு 2 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 22 ஆயிரத்து 343 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 186 ஆக பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 12 லட்சத்து 78 ஆயிரத்து 486 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 94 ஆயிரத்து 227-ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 38-ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 13 ஆயிரத்து 448 ஆகும். பெண்கள் 10 ஆயிரத்து 957 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 221 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 460 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 213 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 247 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 291 நபர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 107 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள். தமிழகத்தில் எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப மாவட்ட அளவில் தளர்வுகளை அளிக்கலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி., கடிதம்