தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 332 பேருக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 17 ஆயிரத்து 321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிக அளவாக இன்றும் கோவை மாவட்டத்திலேயே 2 ஆயிரத்து 319 ஆக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  ஆயிரத்து 405 பேரும், சென்னையில் ஆயிரத்து 345 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 913 பேரும், சேலத்தில் 957 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 726 பேரும், தஞ்சாவூரில் 685 பேரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 472 பேருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 510 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 489 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 447 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 427 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 422 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. 


மாநில அளவில் கொரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 253 பேர் இன்று குணமடைந்தனர். இன்றைய நிலவரப்படி, கோவையில்தான் அதிக அளவாக 24 ஆயிரத்து 22 பேர் பாதிப்பில் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர்.


அடுத்ததாக, திருப்பூரில் 18 ஆயிரத்து 359 பேரும், சென்னையில் 14 ஆயிரத்து 678 பேரும், ஈரோட்டில் 13 ஆயிரத்து 724 பேரும், சேலத்தில் 10 ஆயிரத்து 377 பேரும், மதுரையில் 8 ஆயிரத்து 766 பேரும், தஞ்சாவூரில் 6 ஆயிரத்து 810 பேரும், திருவண்ணாமலையில் 6 ஆயிரத்து 382 பேரும், கன்னியாகுமரியில் 6 ஆயிரத்து 961 பேரும், நாமக்கல்லில் 5 ஆயிரத்து 916 பேரும், செங்கல்பட்டில் 5 ஆயிரத்து 588 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 


மாநில அளவில் தற்போது 2 லட்சத்து 04 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர். பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 31 ஆயிரத்து 253 பேர் இன்று குணமாகினர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 405 ஆகப் பதிவாகியுள்ளது. இதுவரை, மாநிலத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 170ஆகப் பதிவாகியிருக்கிறது. 


முன்னதாக, கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் பதிவான அன்றாடத் தொற்றின் அளவு 36ஆயிரத்து 184 ஆக இருந்தது. மறுநாளிலிருந்து அது குறையத் தொடங்கியது. 22ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35, 873 ஆகப் பதிவானது. அதன் பிறகு, கடந்த 18 நாள்களாக தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதேவேளை, உயிரிழப்பின் எண்ணிக்கை கவலைதரத்தக்கதாகவும் நீடித்துவருகிறது. அவ்வப்போது சிறிது குறைந்தாலும் பொதுவாக அதிகரித்தபடியே இருக்கிறது.