தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த விவசாய கூலியான கணேசன் – பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், குழந்தையின் வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளனர். இதனையெடுத்து நேற்று குழந்தையின் கையில் இருந்த ஊசியை செவிலியர்கள் அகற்ற மருத்துவர்கள் உத்தரவிட்டிருந்தனர், தொடர்ந்து செவிலியர் ஒருவர், குழந்தையின் கையில் கட்டப்பட்டு இருந்த பேண்ட்டை கையால் அகற்றாமல், கத்தரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது.



குழந்தையின் கை கட்டைவிரல் துண்டானதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும். இதுவரை உரிய விளக்கமளிக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த விவகாரம் குறித்த செய்தி பல்வேறு நாளேடு மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்திருந்த நிலையில் ஊடகங்கள் மூலம் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கும் முடிவுக்கு வந்தது.



இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 வயது ஆன பெண் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநர், கீழ்ப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், இரண்டு வாரத்தில் தபால் மூலமாக உரிய விளக்கத்தை மருத்துவக்கல்வி இயக்குநர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமை ஆணையம் தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் ஊரக மருத்துவ சேவைகள் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தனது மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது தொடர்பாக வி.கே.ஆர்.புரத்தை சேர்ந்த பாலாஜி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக திருத்தணி, திருவள்ளூர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, நான்கு வார காலத்திற்குள் மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.