கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் வருகிற ஜீன் 14-ஆம் தேதி வரையில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற முயற்சி பலருக்கு சவாலாக உள்ளது. நடைபாதை வியாபாரிகள் போன்று நாள் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இந்த காலக்கட்டம் கடினமானது. கொரோனா காலகட்டத்தில் அவதிப்படும் பலருக்கும் திரைபிரபலங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  போன்றோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார்.






கொரோனா சூழல் காரணமாக வேலையின்றி , வருமானத்திற்கு வழியின்றி தவித்த தனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் 250 பேருக்கு தலா 5000 ரூபாய் வீதம் நிதி உதவி செய்துள்ளார்.  இதேபோல சூர்யாவின் தம்பி கார்த்தியும் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் 200 பேருக்கு  5000 ரூபாய் நிதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மே மாதம் 12 ஆம் தேதி கொரோனா நிவாரான தொகையாக தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து , முதல்வரிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.






இவர்களைபோல பல நடிகர், நடிகைகள்  கொரோனா காலக்கட்டத்தில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர், நடிகை வரலட்சுமி “கொரோனா ஹெல்ப்லைன் “ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அதில் அவர் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தேவை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உதவியை பெற்றுத்தருதல், மருந்துகள் ஏற்பாடு செய்தல், படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே நடிகை ராஷி கண்ணாவும் கொரோனா சூழலில் பசியால் வாடும் ஏழை எளியோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார். மேலும் உங்களால் முடிந்தால் பசியால் தவிக்கும் ஒருவருக்காவது உணவளியுங்கள் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவர் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உதவிகளை தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.