தமிழகத்தில் அரசு மருந்துவமனைகளில் தொடங்கியது ரெம்டெசிவிர் கவுண்டர்; மதுரையில் ஒரே நாளில் மருந்துகள் தீர்ந்து விட்டதால் மக்கள் அவதயுற்று வருகின்றனர்.


இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்து. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 4 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் உரிய இடம் கிடைக்காமலும், மருந்து தட்டுப்பாடு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மக்கள் தினமும் அல்லல் பட்டுவருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்த போதும் தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.  


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் தான் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இம்மருந்தினை பெறுவதற்காக மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகளவில் பரவுவது மட்டுமில்லாமல், மருந்திற்கான தட்டுப்பாடும் அதிகரிக்க தொடங்கியது.



 


இத்தகைய இக்கட்டான சூழலில் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் ரெம்டேவிசர் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னையை தவிர்த்து  மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, கோவை மாவட்ட மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கான கவுண்டர்கள் அமைக்கப்படும் என பதவியேற்ற பின்னதாக தெரிவித்தார். இதனையடுத்து  கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நேற்று முதல்  ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான கவுண்ட்டர்கள் நேற்று முதல் தொடங்கியது.


குறிப்பாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல் மருந்து விற்பனை தொடங்கியது. நேற்று ஒரு நாளில் 500  பாட்டில் மருந்துகள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மருந்துகள் இருப்பு இல்லாத நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவக்கல்லூரி மருந்துவமனை முன்பாக குவிந்திருந்தனர். ஆனால் மருந்துகள் முழுவதுமாக தீர்ந்துவிட்ட காரணத்தினால் தீடிரென இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. இதனால் மக்கள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டனர். முறையான முன்னறிவிப்பு இல்லாமல் விடுமுறை அளித்து விட்டதாகவும் விரைவில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



 


இதே போல் தமிழ் நாடு அரசு அறிவுறுத்தல் படி திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள மருத்துவகல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து  வழங்கப்படுகிறது. 100 மில்லிகிராம் 6 வயல்கள் ரூ.9408-க்கு வழங்கப்படுவதாகவும், இதனைப்பெறுவதற்கு கொரோனா பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளிகளின் ஆதார் அட்டை, சிடி ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக தற்போது மற்ற மாவட்டங்களிலிருந்து யாரும் சென்னை செல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.



முன்னதாக, சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் இருந்த 29 ரெம்டெசிவிர் மருந்து காணாமல் போன விவகாரம் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருந்து காணாமல் போன விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.