தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருவதாக, அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’தமிழகத்தில் 1904களில் தொடங்கப்பட்ட துறை கூட்டுறவுத் துறை. கூட்டுறவுத் துறைகளின் தாயகமே தமிழ்நாடு என்று சொல்லலாம். சென்னை தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. மாவட்ட அளவில் உள்ள 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி வருகின்றன.
கிராம அளவில் இயங்கும், குறிப்பாக விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 4453 உள்ளன. இவற்றில் 3,500-க்கும் மேற்பட்ட வங்கிகள் லாபகரமாகவே செயல்படுகின்றன’’.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பதில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் எதுவும் கூறாதது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின் போது அமைச்சர் பெரிய கருப்பனுடன் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.