அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி:


மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.



அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


"கல்வி செலவை அரசே ஏற்கும்"


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிடுகையில், "திமுக அரசின் முதலமைச்சர், நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.


 






நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!