அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய திராவிட மாடல் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இணைப்புச் சாலை, தெரு விளக்குகள், சோலார் விளக்குகள், குடிநீர் வசதி, வீடற்ற இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு வீடு, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மேலும் 4 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரையில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம்:
- ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நலனுக்காக தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதி திராவிடர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடி மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 732 பேருக்கு கருணை அடிப்படையில் கல்வி உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- தீண்டாமைக்கு எதிராக ஜனவரி மாதத்தில் மனிதநேய வார விழா நடத்தப்படுகிறது.
- சாதி வேறுபாடற்ற கிராமங்களை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் பரிசுக்கு இந்த ஆண்டு 37 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சமூக கண்ணோட்டத்தோடு அணுகி அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் வாசிக்க..