அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் இன்று பேசியதாவது, “தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி ஒரு சிறப்பு உண்டு.


ஒப்பற்ற பயிற்சியாளர்கள்:


இப்போதும் கூட யார்? யாரோ? தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சிகளும் செய்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கான காரணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தி.மு.க. என்ற அணியும், அந்த அணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் எனும் கேப்டன்தான்.


அதோடு மட்டுமின்றி எங்கள் அணிக்கு கிடைத்துள்ள ஒப்பற்ற பயிற்சியாளர்கள் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தா. இப்படிப்பட்ட பயிற்சியாளர்கள் எந்த அணிக்கும் கிடைத்தது இல்லை. எந்த அணி வலுவான அணி என்றும், யாருடன் நாங்கள் எந்த நேரத்தில் மோத வேண்டும் என்றும் எங்களுக்கு பெரியார் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.


கேப்டன் ஸ்டாலின்:


எப்படி ஒற்றுமையுடனும் கடமை, கண்ணியம் கட்டுப்பாடுடனும் விளையாட சொல்லிக் கொடுத்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக்கூடாது என்று எங்களுக்கு கற்றுத்தந்துள்ளார் அண்ணா. எப்போது பொறுமையுடன் ஆட வேண்டும் என்றும், எப்போது  சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார் எங்கள் அணித்தலைவர் முதலமைச்சர்.


சொல்லிக்கொடுப்பது மட்டுமின்றி ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கச் செய்வது என்று நேற்று ஒரு சிக்ஸர் அடித்தார். டெல்டாலில் வர இருந்த நிலக்கரி சுரங்கத்தை தடுத்து நிறுத்து இன்னொரு சிக்ஸர் அடித்து நமது அணியின் கேப்டனாக 2 சிக்ஸர்களை அடித்துள்ளார்.”


இவ்வாறு அவர் பேசினார்.


ரெஃப்ரி சபாநாயகர்:


தி.மு.க.வை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர். நடிகரான அவர் நடித்த திரைப்படங்களும், திரைப்பட மேடைகளில் அவர் பேசியதுமே அதற்கு உதாரணம். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டபேரவை தலைவர் அப்பாவுவை நியாயமான ரெஃப்ரி என்றும் கூறினார்.  


மேலும், இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் முன்னாள் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த தமிழர்களும் ஆடவில்லை என்றும், இதனால், சி.எஸ்.கே. அணியை தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.