தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார்.


தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதா?


நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் பதிவிடுகையில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!


 






சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!


"ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்"


திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் பேசிய ஆளுநர் சர்ச்சையை கிளப்பும் விதமாக கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.


இதையும் படிக்க: "இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!