ஆவின் பச்சை பால் பெயர் மாற்றப்பட்டு, விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஆவின் நிறுவனம் இன்று தெரிவித்து உள்ளதாவது:


’’ஆவின்‌ நிறுவனம்‌ நிலைப்படுத்தப்பட்ட பாலின்‌ (பச்சை நிற பால்‌) விற்பனை குறைப்பு மற்றும்‌ உற்பத்தி நிறுத்தம்‌ என்று எந்த ஒரு முடிவையும்‌ எடுக்கவில்லை.


புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே


மக்கள்‌ நலன்‌ கருதி, எதிர்வரும்‌ பால்‌ தேவையை கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பால்‌ சந்தையில்‌ அனைவரும்‌ விரும்பும்‌ வகையில்‌ வைட்டமின்‌ ஏ மற்றும்‌ டி செறிவூட்டப்பட்டு மற்றும்‌ இதர கொழுப்புச்‌ சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும்‌ பொது மக்களிடம்‌ கருத்துக்கள்‌ கேட்கப்பட உள்ளன. மேலும்‌ எந்த விதமான புதிய வகை பாலையும்‌ இதுவரை ஆவின்‌ விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.


புதிய வகையான பால்‌ விற்பனை


ஆவின்‌ நிறுவனம்‌ புதிய வகையான பால்‌ விற்பனை தொடங்கும்‌ பட்சத்தில்‌ அனைத்து ஊடகங்களுக்கும்‌ தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்’’‌.


இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.