செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்லுவார் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு பத்திரிக்கை குறிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் விசாரித்த மாண்புமிகு பிரதர் அவர்களுக்கு நன்றி கூறிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28- ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டிஆர் பாலு, திருமதி கனிமொழி மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்