கடந்த 2005 ல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிகத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கார் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து மாதம் 2% என் கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், 2 சதவீத வரி விதிப்பதற்கு பதிலாக தனக்கு 400% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் நடிகர் விஜய் புகாரளித்திருந்தார். 


இந்த வழக்கின் தொடர்ச்சியாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிகத்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 




இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என ஹாரீஸ் ஜெயராஜ் வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும்  சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக 2019 ஜனவரியில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


வழக்கு முழு விவரம் :


நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி 400 சதவீத அளவுவிற்கு வரி விதித்து கடந்த டிசம்பர் மாதம் வணிக வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், “ நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. ஆகவே வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும்” என கூறியிருந்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுமட்டுமல்லாமல், இதே போல அடையார் கேட் ஹோட்டல் நிர்வாகமும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008 ஆம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டுதான் வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.


விஜய் தரப்பு வைத்த வாதம்:


நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விஜய்க்கு 400 சதவீதம் அளவிற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதனையடுத்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்த தமிழக அரசு, “ இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு நுழைவு வரி செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருக்கும் நிலையில், மனுதாரர் குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தவில்லை. ஆகவே 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான காலத்திற்கு, நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, 3 வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண