தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவருடைய பிறந்தநாளை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். அப்போது முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், காமராஜரின் 120 பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார். 






காமராஜர் வரலாறு :


விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவர் அரசியலில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். சுதந்திர போராட்டங்களிலும் இவர் பங்குபெற்றார். இவர் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இவரை ஆங்கிலேயே அரசு சிறையில் அடைத்தது. அதன்பின்னர் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உருவாகினார். 


1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1952ஆம் ஆண்டு விருதுநகரிலிருந்து எம்பியாக தேர்வாகினார். 1954ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.


தமிழ்நாட்டின் முதலமைச்சராக இவர் 9 ஆண்டுகள் பதவி வகித்தார். அந்த 9 ஆண்டுகளில் இவர் கல்விக்காக நிறையே விஷயங்களை செய்தார். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய மக்கள் நிச்சயம் கல்வியை கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஏழை மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்படி இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தின் மூலம் பலரும் பயன் அடைந்தனர்.


இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிற்கே முன்னோடியாக அமைந்தன. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. தமிழ்நாட்டின் இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து புகழ்ந்து வந்தன. காமராஜரின் இந்தத் திட்டம் அத்தகைய தொலை நோக்கு பார்வையுடன் அமைந்திருந்தது. கொரோனா பேரிடர் காலங்களிலும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் நமக்கு நன்றாக தெரியவந்தது. பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண