சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்திரவிட்டுள்ளார்.
இருசக்கரத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் செய்தியாளர் மரணம்:
தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக திருநெல்வேலி பகுதியில் பணிபுரிந்து வந்தவர் முத்துக்குமாரசாமி (52). இவர் நேற்று (21.11.2023) இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததாகவும் அவசரமாக வண்டியை திருப்பியபோது சாலை தடுப்பானில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் முகம், தலையில் பலத்த அடிபட்டு நினைவை இழந்துள்ளார். திருநெல்வேலி ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செய்தியாளர் முத்துக்குமாரசாமிக்கு சூரிய கல்யாணி என்ற மனைவியும், சுப்பிரமணியன் என்ற மகன், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். விபத்தில் செய்தியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் இரங்கல்:
செய்தியாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..